மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவன கிளையில் பணியாற்றி வந்த மனிதவள மேலாளர் நிதா கான் சத்ரபதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதாக கடந்த பிப்ரவரி மாதம் புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாசிக் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் போது, மலேசியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகர் டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கெனவே கைதான சில டீம் லீடர்கள், சக ஊழியர்களை குறிப்பிட்ட மத சார்ந்த நடைமுறைகளை பின்பற்றும்படி அழுத்தம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டிசிஎஸ் மேலாளரான நிதா கான் தலைமறைவாக இருந்து வந்தார். 2021ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பணியில் சேர்ந்த அவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான உள்புற புகார் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
பெண் ஊழியர்கள் பலர் பணியிட பாலியல் தொல்லைகள் குறித்து முறையிட்டபோதும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் மதரீதியான அழுத்தங்கள் தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிதா கான் கடந்த ஐந்து நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
சத்ரபதி சம்பாஜிநகர் காவல் தலைவர் பிரவீன் பவார் தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸார், கடந்த சில நாட்களாக அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதன் பின்னர், வியாழக்கிழமை சத்ரபதி சம்பாஜிநகரில் நிதா கான் கைது செய்யப்பட்டதாக நாசிக் காவல் ஆணையர் சந்தீப் கர்னிக் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் அடிப்படையில், நிதா கான் மீது மிரட்டல் விடுத்தல், பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாசிக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
