சென்னை: நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்கிறார். எனக்கு நடிகை நயன்தாரா வேண்டும். அந்த கனவை நிறைவேற்றுவாரா?” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த கருத்துக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி, “அரசியல் நாகரிகமும் அடிப்படை அறமும் அ.தி.மு.க.வினருக்கு இல்லை. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு அவர்களிடம் வழக்கமாகி விட்டது. இதற்கு கட்சி தலைமையிலிருந்து நடவடிக்கை எதிர்பார்ப்பது பயனற்றது” என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “ஒரு பெண்ணை பொதுவெளியில் இவ்வாறு ஆபாசமாக பேசுவது ஏற்க முடியாதது. அரசியல் மேடைகளில் பெண்களை இழிவுபடுத்தும் மனநிலை ஆபத்தானது. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் பாலபாரதி, “நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேசுவது கண்டனத்திற்குரியது. அவர் தேர்தலில் போட்டியிடும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நடிகையிடமும் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
தமிழக பா.ஜ. துணைத் தலைவர் குஷ்பு, “ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணால் தான் பிறக்கிறார். இப்படிப் பேசுவதற்கு முன், அதே வார்த்தைகளை தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை பற்றி சொல்ல முடியுமா என்று சிந்திக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்தார்.
