கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான முக்கியமான ஊசி மருந்து தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகள் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சைக்காக வருகின்றனர். கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளில், வேகமாக வளரக்கூடிய புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் விலையுயர்ந்த ஊசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இவை முக்கிய ஆதாரமாக உள்ளன.
இந்நிலையில், ‘போர்டெசோமிப்’ (Bortezomib 2mg) என்ற முக்கிய ஊசி மருந்து கடந்த மூன்று மாதங்களாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், நோயாளிகளை திருப்பி அனுப்பி, தனியார் மருந்தகங்களில் வாங்குமாறு அறிவுறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறுகையில், “எனக்கு ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்காக வாரந்தோறும் ஊசி மருந்துகள் செலுத்தப்படுகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட மருந்து இல்லை என்பதால், கடந்த டிசம்பர் மாதம் முதல் அதை வெளியே வாங்க சொல்லப்படுகிறது. இந்த மருந்து 600 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தினக்கூலி வேலைக்கு செல்லும் எங்களால் இதை வாரந்தோறும் வாங்குவது மிகவும் கடினம்,” என்றார்.
மேலும், உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் கீதாஞ்சலி விளக்கம் அளிக்கையில், “உயிர்காக்கும் மருந்துகள் தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்படுகிறது. தற்போது நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால், குறிப்பிட்ட மருந்து இல்லை. உடனடி தேவைக்காக 50 ஊசி மருந்துகளை வெளி மருந்தகங்களில் இருந்து வாங்க தீர்மானித்துள்ளோம். இனி நோயாளிகளுக்கு சிரமம் இருக்காது,” என்றார்.
