சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை (ஏப்ரல் 16) நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய பாஜ அரசு பார்லிமென்டில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தமிழகத்துக்கும் தென் மாநிலங்களுக்கும் மாபெரும் அநீதி என தெரிவித்துள்ளார்.
விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது என்றும், பாஜ அரசு நெருப்போடு விளையாடுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். திமுக தலைவராகவும், சுயமரியாதை கொண்ட தமிழனாகவும் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒரு வீடியோவையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
