சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறிய வழக்கில், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த குமாரவேல் தாக்கல் செய்த மனுவில், உதயநிதியின் வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய தேர்தல் வேட்புமனுவில் அதுகுறித்த தகவல் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவரது மனைவி அதே நிறுவனத்தில் ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த பரிவர்த்தனை குறித்து தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2021ஆம் ஆண்டு ‘ஸ்னோ ஹவுசிங்’ நிறுவனத்திற்கு ரூ.11.5 கோடி கடன் வழங்கியதாக கூறியிருந்த நிலையில், தற்போது ரூ.10 கோடி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை குறித்து விவரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வருமானம் தொடர்பாகவும் முரண்பாடுகள் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020க்கு முன் ரூ.2.02 கோடி வருமானம் இருந்ததாக கூறிய நிலையில், தற்போது ரூ.10.98 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த அதிகரிப்புக்கு விளக்கம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய முழுமையற்ற அல்லது தவறான தகவல்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானவை என்பதால், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
