நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த முக்கிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில், தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த சூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கும் புத்துயிர் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவு தற்போது பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது. இதுகுறித்து கூட்டுக்குழுத் தலைவர் பி.பி. சவுத்ரி கூறுகையில், மசோதாவில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மசோதாக்களுக்கு பரந்த அரசியல் ஆதரவைப் பெறும் நோக்கில் பல்வேறு பிராந்திய கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மசோதாவின் சில அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவற்றை எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆகிய இரு முக்கிய அரசியல் சீர்திருத்தங்களும் இந்திய அரசியல் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவை மீண்டும் விவாதத்தின் மையமாக மாறியுள்ளன.
