சென்னை: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அதிமுக அலுவலகத்திற்கு தமாகா தலைவர் ஜிகே வாசன் செல்லாதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியது. இதனால் தமாகாவுக்கு அதிருப்தி உள்ளதா என்ற சந்தேகம் பரவியது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையில், ஜிகே வாசன் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அதிருப்தி இருப்பதாக வதந்திகள் பரவின.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று (மார்ச் 24) ஜிகே வாசன் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று இரவு சென்னை நகரில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன். வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீட்டில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
