வேலூர்: காட்பாடி தொகுதியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான Durai Murugan உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக பொதுச்செயலாளரான துரைமுருகன், காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை தொகுதிகளில் மொத்தம் 12 முறை போட்டியிட்டு 10 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலிலும் காட்பாடி தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடி வந்த அவர், திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக பிரசாரம் தொடங்கினார். இந்த பேரணி காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து அண்ணாதுரை சிலை வரை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அனுமதி நிபந்தனைகளை மீறியது மற்றும் பேரணியின் போது பட்டாசு வெடித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
