கான்பூர்: உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கும்பலை போலீசார் கண்டுபிடித்து, ஐந்து டாக்டர்கள் மற்றும் ஒரு இடைத்தரகரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம், பீஹாரைச் சேர்ந்த ஆயுஷ் என்ற இளைஞர் அளித்த புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. வறுமையில் இருந்த அவரை, ஷிவம் அகர்வால் என்ற இடைத்தரகர் அணுகி, தனது உறவினருக்கு சிறுநீரக தானம் வழங்கினால் ரூ.10 லட்சம் தருவதாக கூறி சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆயுஷின் சிறுநீரகம் அகற்றப்பட்டது. பின்னர், அந்த உறுப்பை மற்றொருவருக்கு சுமார் ரூ.60 லட்சத்திற்கு விற்று கும்பல் லாபம் பெற்றுள்ளது. ஆனால், ஆயுஷுக்கு வாக்குறுதியான தொகையில் வெறும் ரூ.3.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமாற்றம் உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த சட்டவிரோத வலைப்பின்னல் வெளிச்சத்துக்கு வந்தது.
விசாரணையில், Kanpur பகுதியில் செயல்பட்ட மூன்று தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்பட்டது. மேலும், டாக்டர்கள் பீரித்தி அஹுஜா, சுர்ஜீத் சிங் அஹுஜா, ராம் பிரகாஷ், ராஜேஷ் குமார், நரேந்திர சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், ‘Telegram‘ செயலி மூலம் இளைஞர்களை இலக்காக வைத்து தொடர்பு கொண்ட இடைத்தரகர் ஷிவம் அகர்வாலும் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை பணம் காட்டி ஏமாற்றி, சட்டவிரோத உறுப்பு தானத்திற்கு பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த கும்பலுக்கு லக்னோ, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் நேபாளம் வரை வலையமைப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிறுநீரக தானம் வழங்கியவரும், பெற்றவரும் உடல்நலக்குறைவால் Lala Lajpat Rai Hospitalல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
