தீபாவளிக்கு மறுநாள் நவ. 9 அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் வார இறுதி நாளாக இருப்பதால், சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடிவிட்டு மீண்டும் பணியிடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, நவம்பர் 9ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி அரசு விடுமுறையாக இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாகச் செயல்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
