மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பூஜை செய்ய 5 பேர் கொண்ட குழுவை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அது நடைமுறைக்கு வராததாக கூறப்படுகிறது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதுடன், கோர்ட்டை அவமதிக்கும் நோக்கம் இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இதனை தொடர்ந்து மதுரை கலெக்டர் பிரவீன் குமார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் ஆஜரானபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் தீபத்தூணில் 5 பேர் கொண்ட குழுவை அனுமதித்து பூஜை நடத்த முடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு கலெக்டர் மேலதிக அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் மார்ச் 4ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும், போலீஸ் கமிஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் கோவில் சொத்துகள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டுமே இல்லை; அது கோவிலுக்கே சொந்தமானது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் அனைவரும் மார்ச் 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
