திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முருக பக்தர்கள் மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் கிரிவலம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்க வேண்டும் என முருக பக்தர்கள் பேரவை, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதையடுத்து நேற்று நடைபெற்ற கிரிவலத்தில் பல ஆயிரம் பக்தர்கள் கூட்டமாக கலந்து கொண்டனர். வழக்கமாகவும் பவுர்ணமி நாளில் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பெருமளவில் கிரிவலம் செய்வது வழக்கம்.
இந்த கிரிவலத்தில் பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராமரவிக்குமார், வி.எச்.பி. நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் கிரிவலத்தில் பங்கேற்றனர்.
முருக பக்தர்கள் பேரவையினர் தனியாக கிரிவலம் செய்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட ஒரு லட்சம் பக்தர்களுக்கு ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்பட்டது.
