சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆய்வின் போது கண்டறியப்பட்ட முறைகேடுகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட திடீர் ஆய்வின் மூலம் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவற்றில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதே கோவிலில் காணிக்கை பணம் அலட்சியமாக கையாளப்பட்டதாகவும், தரிசன கட்டண வசூலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ராமேஸ்வரம் கோவிலில் பிரசாத விற்பனை தொடர்பான முறைகேடுகள், திருவண்ணாமலை, பழநி மற்றும் திருத்தணி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள், விலை உயர்ந்த பொருட்கள் மாயமான சம்பவங்கள் போன்ற பல புகார்கள் கடந்த காலங்களில் எழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கோவில்களில் தங்கத் தகடுகள் மாயமானது, திருமேனிகள் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோவில் சொத்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விவரங்கள், முறைகேடுகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார
