தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால், அந்தக் குழந்தைக்கு இத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், குழந்தையின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியை கொண்டாடும் நோக்கத்திலும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் பயனாளர்களாக கருதப்படுவார்கள். திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா செப்டம்பர் 15 அன்று நடைபெற உள்ளது.
