புதுடெல்லி: இந்தியா பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நோக்கில் வேகமாக முன்னேறி வருவதாகவும், கடல் முதல் வான் வரை நாட்டின் பாதுகாப்பு வலிமை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆறு மாதங்களில் இந்தியா பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
விமானத் தொழில்நுட்பத் துறையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானம் வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், குஜராத் மாநிலம் வதோதராவில் 40 சி-295 விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் உதவும் என்றும், ‘தற்சார்பு பாரத்’ இலக்கை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.
அதேபோல், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். துனகிரி, ஐ.என்.எஸ். ஷன்சோதக் மற்றும் ஐ.என்.எஸ். அக்ரே ஆகிய போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கிய நீண்ட தூர நிலத் தாக்குதல் ஏவுகணை (LRLACM) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது பாதுகாப்புத் துறையில் மற்றொரு முக்கிய மைல்கல் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது பாரம்பரிய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் முக்கிய முயற்சியாக இருக்கும் என அவர் பாராட்டினார்.
உலகம் முழுவதும் இந்திய கலாசாரம் பரவி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், டொமினிகன் குடியரசில் ‘பிரம்மகமல் டொமினிகானா’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் ஒலிப்பதிவுகள் மூலம் வேத மந்திரங்களின் உச்சரிப்பைக் கற்று, இந்திய பாரம்பரியத்தைப் பரப்பி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
