சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட 7,599 வேட்புமனுக்களின் பரிசீலனை நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் மொத்தம் 7,599 மனுக்கள் பெறப்பட்டன.
மனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவற்றின் பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் இந்த செயல்முறை நடைபெற்றது. பரிசீலனையின் போது வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அதேபோல், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் உட்பட, நேற்று இரவு 9:30 மணி நிலவரப்படி மொத்தம் 4,472 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
மேலும், 11 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மனுக்களை வாபஸ் பெற நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற வாய்ப்புள்ளது.
