புதுடில்லி:
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். (சிறப்பு தீவிர திருத்தம்) பணிக்குப் பின், சுமார் 90.83 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி நெருங்கியுள்ளதால், இனி புதிய பெயர் சேர்ப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் 294 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்.
தேர்தலுக்கு முன், கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 63.66 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.66 கோடியில் இருந்து 7.04 கோடியாக குறைந்தது.
மேலும், தர்க்க ரீதியான முரண்பாடுகள் காரணமாக 60.06 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தற்காலிகமாக பட்டியலில் சேர்க்கப்படாமல் வைக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர்கள் அளித்த மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கொல்கத்தா உயர் நீதிமன்றம் அமைத்த தீர்ப்பாய நீதிபதிகள் விசாரித்து இறுதி முடிவு எடுத்தனர்.
அதில், 60.06 லட்சம் பேரில் 27.16 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதே சமயம் 32.68 லட்சம் பேரின் பெயர்கள் மீண்டும் இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இதன் மூலம், மொத்தம் 90.83 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட வாரியான தரவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதால், திருத்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றன. தர்க்க ரீதியான முரண்பாடுகள் கொண்ட 60.06 லட்சம் பேரில், 59.84 லட்சம் பேரின் விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், 22,163 வாக்காளர்களின் விவரங்கள் மின்னணு கையொப்பத்திற்காக காத்திருக்கின்றன. இந்த செயல்முறை முடிந்த பின் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததால், தேர்தல் விதிகளின்படி வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டுள்ளது. இனி எந்த திருத்தமும் செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவு அல்லது சட்டப்பூர்வ வழிகாட்டுதலின் அடிப்படையில் மட்டுமே மாற்றங்கள் செய்ய முடியும்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பான வழக்கு வரும் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
