பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழகம் முழுவதும் பாஜக சித்தாந்தமும் கட்சியின் கட்டமைப்பும் பரவியுள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசு வாக்கு வங்கி அரசியலை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், நாடு முழுவதும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.14 லட்சம் கோடி அளவிலான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா கடன் திட்டம் மற்றும் ஜன் தன் வங்கி கணக்குகள் திட்டங்களில் தமிழகமே அதிக பயனாளிகளைக் கொண்ட மாநிலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே வளர்ச்சிக்காக ரூ.7,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இதுவரை பாஜக பெரிய தேர்தல் வெற்றிகளைப் பெறவில்லை என்றாலும், கட்சியின் கொள்கைகள் மற்றும் அமைப்பு மாநிலம் முழுவதும் வலுவாக பரவியுள்ளதாக அவர் கூறினார்.
அண்ணாமலை கட்சியில் இருந்து விலகியது அவரது தனிப்பட்ட முடிவு என்றும், அதுகுறித்து கூடுதல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
