தமிழகம் முழுவதும் அமைதியாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள்
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஜயதசமி விழா மற்றும் 100-வது ஆண்டு நிறைவையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்று (அக்டோபர் 25) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
சென்னை எழும்பூர், திருவொற்றியூர், கொளத்தூர், கொரட்டூர், அய்யப்பன்தாங்கல், மேடவாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, 45-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் கனமழைக்கு மத்தியிலும் பேரணிகள் நடைபெற்றன. அணிவகுப்பில் பங்கேற்றவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டல் அருகே நேற்று மாலை 4 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட அணிவகுப்பு, ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது.
அணிவகுப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்த மகராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆசியுரை வழங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் அமைதியாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
