சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே என்று தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே என்ற கேள்வி எழுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
இதனால் அந்தச் சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீள முடியாத துயரம்
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் தவித்த நிலையில், காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்துள்ளார்.
அந்தச் சிறுமி எதிர்கொண்ட மனநிலையை எண்ணிப் பார்த்தால், அது மீள முடியாத துயரத்தை ஏற்படுத்துகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண் குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் மறையவில்லை.
மேலும் நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் அரிவாள் வெட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. எந்த குற்றமும் செய்யாதவர்கள்மீது நடந்த இந்த தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பாலியல் வன்கொடுமை
நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு காவல் மரணம் ஏற்பட்டது.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் பிற பகுதிகளிலும் தாக்கியதாக திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொன்று, அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை நடைபெற்றது.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை நடந்தது.
கோவை அரசு பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் உணவுப் பாதுகாப்பில் அலட்சியத்தை காட்டுகிறது.
தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் எம்.பி கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த ஒன்றரை வாரத்திற்குள் நடந்த இந்த சம்பவங்கள் தமிழக மக்களின் மனதை உலுக்கியுள்ளன.
பாதுகாப்பில்லை
ஒரு வாரத்திற்குள் இவ்வளவு சம்பவங்கள் நடந்துள்ளன என்றால் திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையை பார்த்தும் முதல்வர் ஸ்டாலின் மௌனமாக இருப்பது எப்படி என்று கேள்வி எழுகிறது.
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை பல்வேறு தரப்பினரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சட்டம் ஒழுங்கு
தன்னுடைய ஆட்சியில் தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை கவனிக்காமல், கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதில் மட்டும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதில் கவனம் செலுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இத்தகைய ஆட்சி தேவையா என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தவறிய திமுக அரசை மக்கள் மாற்றத் தயாராக உள்ளனர் என்று விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
