சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு தி.மு.க.வினர் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வர தயக்கம் காட்டி பிற மாநிலங்களை நோக்கிச் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாகவும், அவற்றில் கவனம் செலுத்தாமல் அரசு செயல்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க.வை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்றும், தற்போதைய ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் ஒரு மாதத்திலோ அல்லது ஆறு மாதங்களுக்குள்ளோ தேர்தல் வரக்கூடும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்ள கட்சியினர் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
