சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) டிஜிபியாக பணியாற்றி வரும் அவர், விரைவில் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
சட்டசபைத் தேர்தல் காலத்தில் தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால், 22 வயதிலேயே இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். தமிழகத்தில் தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றியுள்ளார்.
பின்னர் சென்னை பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர், சிபிசிஐடி ஐஜி, மதுரை மாநகர காவல் ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் மற்றும் தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி மூலம் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு விசாரணைகளிலும் சிறப்பாக செயல்பட்டவர் என அறியப்படுகிறார்.
கொரோனா பரவல் காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அவர், களத்தில் நேரடியாக செயல்பட்டு பல்வேறு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார்.
தமிழக காவல்துறையின் உயரிய பொறுப்பான டிஜிபி பதவிக்கு மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டிருப்பது காவல்துறை நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
