சிவகங்கை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி (26) என்பவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளி மாணவியான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி ஏழு மாத கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவகங்கை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோகிணி, இன்று வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கருப்புசாமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
மேலும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
