சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் D. K. Shivakumar வெளியிட்டார்.
“தமிழகத்தை முன்னேற்றுவோம்” என்ற தலைப்பில் 10 முக்கிய பிரிவுகளுடன், 36 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதில், காலியாக உள்ள 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் அட்டையாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
காவல்துறையில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், பிஎம் கிஷான் திட்டத்தில் சேராத நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 6 மண்டலங்களில் தனிச் சிறப்பு பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மனநல மருத்துவமனைகள் நிறுவப்படும். மனநல முதலுதவி வழங்க 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஆரம்ப சுகாதார மையங்கள் பலப்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் கற்றல் வழங்கப்படும் என்றும், ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படும். 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்ற இலக்கையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
விவசாயப் பொருட்கள் சந்தைப்படுத்த வாரியம் அமைக்கப்படும். பாசனக் கால்வாய்கள் மீட்டெடுத்து நவீனமயமாக்கப்படும். தமிழகத்தை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 2030க்குள் நாய்களுக்கு 100% தடுப்பூசி வழங்கப்படும். இரு மொழிக் கொள்கை தொடரும் என்றும், முக்கிய நகரங்களில் 24 மணி நேர குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்பட்டு, நிலப்பட்டா விரைவாக வழங்கப்படும் என்பதும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
