தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன், ஒரத்தநாட்டில் நடைபெற்ற த.வெ.க. மகளிர் தின விழாவில் அவர் பங்கேற்று, Vijay நடித்த திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, அரசுப் பணியாளர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கருதி, அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கும் உத்தரவை பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் கடந்த 24ஆம் தேதி பிறப்பித்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஆண்டுதோறும் மகளிர் தின விழாவை தானே ஏற்பாடு செய்வது வழக்கம். த.வெ.க. நிகழ்ச்சி நடைபெற்ற அதே தனியார் மண்டபத்தில், அவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் தனது விழா நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில், த.வெ.க. பேனர்கள் அகற்றப்படாமல் இருந்ததால், தான் அந்தக் கட்சியின் நிகழ்ச்சியில் நடனமாடியதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
