அமெரிக்காவின் பிரபலமான டைம் இதழ் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.
அரசியல், கலை, அறிவியல், வணிகம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களை ஆண்டுதோறும் டைம் இதழ் தனது சிறப்பு பட்டியலில் இடம்பெறச் செய்து வருகிறது. இந்த ஆண்டின் விளையாட்டுத் துறைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 29 வயதான தொடக்க ஆட்டக்காரரான மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். உள்நாட்டு ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கே சொந்தம்.
மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் 17 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகளில் ஒருவராக இருக்கும் மந்தனா, ஒரே ஆண்டில் 1,000-க்கும் மேற்பட்ட ஒருநாள் சர்வதேச ரன்கள் எடுத்த முதல் வீராங்கனையாகவும் சாதனை படைத்துள்ளார்.
மேலும், 2024 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தி மகளிர் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளார். இந்திய அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது துணை கேப்டனாக செயல்பட்டு, தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகவும் திகழ்ந்தார்.
தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் பல விருதுகளை வென்றுள்ள ஸ்மிருதி மந்தனா, பிபிசி இந்தியாவின் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதையும் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் டைம் பட்டியலில் கூடைப்பந்து ஜாம்பவான் லெப்ரான் ஜேம்ஸ், கால்பந்து நட்சத்திரங்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கோல்ப் வீரர் ரோரி மெக்ல்ராய் உள்ளிட்ட பல்வேறு உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
