புதுடில்லியில், டிஜிட்டல் கைது மோசடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களில் மீண்டும் புதிய வாட்ஸாப் கணக்குகளை தொடங்க முடியாத வகையில் அவற்றை முடக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்த மோசடிகளை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய உள்துறை அமைச்சகம் துறைகளுக்கு இடையேயான உயர்மட்ட குழுவை அமைத்தது. டில்லியில் நடைபெற்ற இந்த குழுவின் மூன்றாவது கூட்டத்தில் வாட்ஸாப் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பயனர் பாதுகாப்பை மேம்படுத்தவும், போலீசாரின் விசாரணைகளுக்கு உதவவும் வாட்ஸாப் பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.
டிஜிட்டல் மோசடிகளில் பயன்படுத்தப்படும் மொபைல் போன், லேப்டாப் போன்ற சாதனங்களை முழுமையாக முடக்கும் திட்டம் குறித்து 45 நாட்களில் முன்மொழிவை சமர்ப்பிக்க வாட்ஸாப் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், அந்த சாதனத்தில் புதிய எண்ணை பயன்படுத்தியும் மீண்டும் வாட்ஸாப் கணக்கு தொடங்க முடியாது.
மேலும், நீண்ட நேர மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கவும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு எச்சரிக்கை வழங்கும் வசதியையும் கொண்டுவர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலீஸ் அதிகாரி போல நடித்து வீடியோ கால் செய்வதை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வசதியும் கொண்டு வர வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
