ஜூன் 21 நீட் மறுதேர்வு: தவறு இல்லாமல் நடத்த அரசு உறுதி – தர்மேந்திர பிரதான்
புதுடில்லி: ஜூன் 21ல் நடைபெற உள்ள நீட் மறுதேர்வை எந்த வித தவறும் இல்லாமல் நடத்த அரசு முழு கவனத்துடன் செயல்பட்டு வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தேசிய தேர்வு முகமை ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மையை நீக்க மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய தர்மேந்திர பிரதான், “ஜூன் 21ல் நடைபெறும் நீட் மறுதேர்வை 100 சதவீதம் தவறு இல்லாமல் நடத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தேர்வை நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், கடந்த தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்வு மாபியாக்கள் நடத்தும் மோசடிகளால் தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
நீட் தேர்வு தொடர்பான சர்ச்சையால் சுமார் 22 லட்சம் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறிய அவர், அந்த நிலையை அரசு புரிந்துகொண்டு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
