சென்னை: மதம் மற்றும் ஜாதி அடையாளங்களுடன் யாரும் கல்வி வளாகங்களுக்கு வரக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் Rajmohan தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI), பைத்தான் உள்ளிட்ட கோடிங் பாடங்களை கற்பிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு இந்த தொழில்நுட்ப திறன்கள் கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் திருப்திகரமாக இருந்தாலும், அதை மேலும் உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கல்வி வளாகங்களில் மதம் மற்றும் ஜாதி அடையாளங்களுக்கு இடமில்லை என்பதை வலியுறுத்திய அமைச்சர், “சிறிய கயிறாக இருந்தாலும் நான் வரும்போது அதை கழற்றிவிட்டுத்தான் வருகிறேன்” என்று குறிப்பிட்டார்.
மேலும், கல்வி நிலையங்களில் சமூக நீதிக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும், அறிவியல் வளர்ச்சியே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த தலைமுறை, முந்தைய தலைமுறையை விட கல்வியில் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் கூறினார்.
தமிழகம் கல்வித் துறையில் பல மாநிலங்களை விட முன்னிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் மிகவும் முக்கியமான இடங்கள் என்பதால், மாணவர்கள் போதைப் பழக்கங்களின் பாதைக்கு செல்லாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பிரிவினை மற்றும் வேற்றுமையை உருவாக்கும் எந்த செயலுக்கும் கல்வி வளாகங்களில் இடமில்லை என்றும், ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிகள் அனைத்திற்கும் வரவேற்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
