சென்னை: சென்னை பல்கலைக்கழகம் விடுதியில், ஒரு தரப்பு மாணவர்கள் மாட்டிறைச்சி சமைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மற்றொரு தரப்பு மாணவர்கள் பன்றி இறைச்சி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
விடுதியில் பதற்ற நிலை நீடித்து வருவதால், நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தரமணியில் செயல்படும் இந்த விடுதியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு வழங்கப்படுகிறது. அதில், ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அசைவ உணவு வழங்கும் நடைமுறை உள்ளது.
அதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற விடுதி பொதுக்குழு கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை உணவில் மாட்டிறைச்சி வழங்க வேண்டும் என சில மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், விடுதி நிர்வாகம் இதை ஏற்கவில்லை.
இதற்கிடையில், விடுதி மாணவர்களுக்கான பிரத்யேக வாட்ஸ்அப் குழுவில், மாட்டிறைச்சி கோரிக்கைக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, ஒரு தரப்பு மாணவர்கள் கடந்த 10ம் தேதி இரவு விடுதி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “கமிட்டி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், விடுதி விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி சிலர் விடுதி வளாகத்தில் மாட்டிறைச்சி சமைத்து உணவு எடுத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பு மாணவர்கள், “எங்களுக்கும் பன்றி இறைச்சி சமைத்து தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவுகிறது.
விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் உணவில், ‘எக்ஸ்டிரா’ முறையில் ஒரு அசைவ உணவு வழங்கப்படும். இது மாணவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.
சிலர் மாட்டிறைச்சி வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், பல மாணவர்களுக்கு அது ஏற்றதாக இல்லை.
இந்நிலையில், மற்றொரு தரப்பு பன்றி இறைச்சி கோரிக்கை விடுப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சூழ்நிலை மோசமடையாமல் தடுக்க நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தனர்.
