தமிழகத்தின் நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரம் மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த ஆறு மாதங்களை இலக்காக வைத்து தீவிரமாக செயல்படுமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை நேரடியாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், நகர்ப்புறங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கமிஷனர் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை அனைவரும் தினசரி காலை நேரங்களில் கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆய்வுகளின் போது சாலைகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள், கட்டடக் கழிவுகள், சட்டவிரோத போஸ்டர்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலையோரங்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் முறையை ஊக்குவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் கழிவுகளை ஒரே இடத்தில் கொட்டாமல், மறுசுழற்சி மற்றும் அறிவியல் முறைகளில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பணிகளை முறையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் விஜய் நேரடியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், சுகாதாரம் மற்றும் பசுமை தொடர்பான பணிகளில் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
