புதுடில்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், லோக்சபாவில் இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டது.
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் குறித்து லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஆவேசமாக பேசியார்.
அவர் பேசியபோது, நாட்டின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்துகொண்டதாக ராகுல் காந்தி கூறுவது எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு என தெரிவித்தார். பிரதமர் மோடி ஒருபோதும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்காக பார்லிமென்டை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும், சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம் சில தலைவர்கள் அல்லது சில குழுக்களின் கர்வத்திற்காக கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கேள்வி கேட்க பணம் பெற்றதாக குற்றச்சாட்டில் 11 எம்பிக்கள் நீக்கப்பட்டனர் என்றும், அவையில் மிளகுத்தூள் தூவப்பட்ட சம்பவமும் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் நடந்த போதிலும் தற்போது நடைபெறும் இந்த வகை நாடகப் போராட்டங்களை இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விவாதம் முடிவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
லோக்சபாவில் பாஜ தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
