திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றியிருப்பது மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியபோது கூறியதாவது:
மக்களுக்கு நமஸ்காரம். மக்களே நீங்கள் தான் என் கடவுள். கேரளாவை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தை பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த அழகான மாநிலத்திற்கு இப்போது சரியான பெயர் கிடைத்துள்ளது. அனைவரின் முயற்சிகளுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அரசு கேரளாவை ‘கேரளம்’ என பெயர் மாற்றியிருப்பது மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு மகிழ்ச்சியான தருணமாகும்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட உதவிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. தங்கள் உயிரை பணயம் வைத்து பலரின் உயிர்களை காப்பாற்றிய அவர்களின் துணிச்சலை உலகமே கண்டது. நாடு சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் மீனவர் சமூகத்தின் அர்ப்பணிப்பும் துணிச்சலும் வெளிப்படுகிறது.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
டிஜிட்டல் தளம்
கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்படைவதே எங்கள் நோக்கம். அது வளர்ச்சி பெற்ற இந்தியாவுக்கான அடித்தளமாகவும் இருக்கும். வளர்ச்சி பெற்ற கேரளத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்ய முடியும். அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதும் இதன் மூலம் எளிதாகியுள்ளது.
முந்தைய ஆட்சி காலத்தில் மீனவர் சமூகத்தை பல ஆண்டுகளாக புறக்கணித்தனர் என்றும் அவர் கூறினார்.
ரூ.1400 கோடி
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசே.
மேலும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் கேரளத்திற்கு ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
