சந்திரயான்-3 திட்டத்திற்கு அமெரிக்காவின் உயரிய விண்வெளி விருது
நியூயார்க்: இந்தியாவின் Indian Space Research Organisation உருவாக்கிய Chandrayaan-3 திட்டத்திற்கு 2026ம் ஆண்டுக்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கி கவுரவித்துள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 திட்டம், விண்கலத்தை பாதுகாப்பாகவும் மெதுவாகவும் நிலவில் தரையிறக்கி உலகளவில் பெரும் சாதனையை பதிவு செய்தது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்தது.
இந்த சாதனையை பாராட்டும் வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை இந்தியாவிற்கு வழங்கியது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் Vinay Kwatra இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
விருது பெற்ற பிறகு பேசிய அவர், பிரதமர் Narendra Modi தலைமையில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களில் தீவிரமாக செயல்பட்டு வருவதை எடுத்துரைத்தார்.
மேலும், விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோடார்ட் விண்வெளி ஆய்வு விருது என்பது விண்வெளி துறையில் சிறப்பான சாதனைகளை புரிந்தவர்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கும் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
