சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி: சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்து புதிய வரலாறு!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி படைத்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இலக்கைத் துரத்தி விளையாடிய 232 இன்னிங்ஸ்களில், 17 சதங்கள் மற்றும் 52 அரைசதங்களுடன் மொத்தம் 8,720 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் அவர் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி, வெறும் 169 இன்னிங்ஸ்களிலேயே சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சேஸிங்கில் தனது ரன் எண்ணிக்கையை 8,741 ஆக உயர்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதுவரை இலக்கைத் துரத்தும்போது 30 சதங்கள் மற்றும் 46 அரைசதங்களைப் பதிவு செய்துள்ள கோலி, 66.21 ரன்கள் சராசரியுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 162 இன்னிங்ஸ்களில் 19 சதங்கள் மற்றும் 40 அரைசதங்களுடன் 6,801 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா 5,742 ரன்களுடன் நான்காவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் 5,575 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
சச்சின் டெண்டுல்கரை விட 63 இன்னிங்ஸ்கள் குறைவாக விளையாடி அவரது சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கைத் துரத்துவதில் தனது சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
