கோவை: கோவை மாவட்ட வாக்காளர்களை கவர்வதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் பரிசு பொருட்களை வழங்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தி.மு.க. சார்பில் பூத் வாரியாக வீடு ஒன்றுக்கு ஒன்று வீதம் சில்வர் அண்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்ததாக என்ன பரிசுகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே உருவாகியுள்ளது.
கோவை மாவட்ட வாக்காளர்களை கவரும் நோக்கில் இரு கட்சிகளும் போட்டி போட்டு பரிசுகள் வழங்குவதாக கூறப்படுகிறது.
தைப்பொங்கல் காலத்தில் தி.மு.க. சார்பில் பல பகுதிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதில் சில்வர் அண்டா, ஹாட் பாக்ஸ், வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், சம்படம், சில்வர் டப்பா, தட்டு, குடம், பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியானதும் அ.தி.மு.க.வும் பரிசு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் நலத்திட்ட உதவி என்ற பெயரில் 10 தொகுதிகளில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பைகளில் ஹாட்பாக்ஸ், சில்வர் தட்டு மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் சிறப்பு ஏற்பாடாக ஹாட்பாக்ஸ், சில்வர் தட்டு, வேட்டி, சட்டை பிட், சேலை, வாட்டர் பாட்டில் மற்றும் குடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவை தி.மு.க. நிர்வாகிகளை தவிர்த்து மற்றவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு பூத் வாரியாக மஞ்சள் புத்தகத்தில் ஒவ்வொரு வாக்காளரும் எந்த கட்சியை சார்ந்தவர் என்பது குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களை தவிர்த்து மற்ற வாக்காளர்களின் வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலர் அந்த டோக்கன்களை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டதாகவும், சிலர் தயக்கத்துடன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோலப் போட்டி நடத்தி ஹாட்பாக்ஸ் வழங்கப்பட்டதாகவும், தற்போது வீடு வீடாக சில்வர் அண்டா வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இன்னும் இரண்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்படலாம் என தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது:
ஒவ்வொரு பூத்திலும் சுமார் 80 சதவீத வாக்காளர்களை கவரும் வகையில் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
பூத்துக்கு ஏற்ப வாக்காளர்கள் எண்ணிக்கை மாறுபடும். குறைந்தபட்சம் 100 குடும்பங்கள் முதல் அதிகபட்சம் 400 குடும்பங்கள் வரை பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
முதலில் ஹாட்பாக்ஸ் வழங்கிய நிலையில் தற்போது அண்டா வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக ஒரு கிப்ட் பை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அந்த பையில் 3 கிராம் வெள்ளி நாணயம், 35 இன்ச் டிவி, மின்சார அடுப்பு, பால் குக்கர் உள்ளிட்ட பொருட்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
தி.மு.க. பலவீனமாக உள்ள பகுதிகளில் பெரிய பரிசுகள் வழங்கப்படும் என்றும், இரண்டு கன்டெய்னர்களில் பொருட்கள் கோவைக்கு கொண்டு வரப்படுகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. ஆதரவு குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதலில் மறுத்த சிலர் தற்போது பரிசு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மட்டுமே பொருட்கள் ஒதுக்கப்படுவதால் சிலருக்கு வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
