கோவை: கோவையின் வளர்ச்சிக்காக திட்டமிடப்பட்டுள்ள 8 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் முதல்வரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்து அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவிநாசி சாலை மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பது, உப்பிலிபாளையம் ரவுண்டானாவை அகலப்படுத்துவது, நீலாம்பூர்–மதுக்கரை புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவது மற்றும் மரப்பாலம் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொதுப்பணித்துறையை வருவாய் ஈட்டக்கூடிய துறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அனைத்து ஒப்பந்ததாரர்களுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நெடுஞ்சாலைத்துறையில் ‘பேட்ச் ஒர்க்’ என்ற பெயரில் தேவையற்ற செலவுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், ஊழல் இன்றி தரமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் கட்டடங்கள் குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்றார்.
கோவையில் நீதிபதிகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வளாகங்கள் குறித்து பேசிய அவர், அதிக மதிப்புள்ள நிலங்களில் குறைந்த தளங்கள் கொண்ட கட்டடங்களை அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்தார். குறைந்த இடத்தில் அதிக பயன்பாட்டை வழங்கும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உயரமான கட்டடங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையின் பழைய கட்டடங்கள் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புதிய கட்டடங்கள் அமைப்பது அல்லது பழைய கட்டடங்களை சீரமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
கோவைக்கான 8 திட்டங்கள்
கோவையில் செயல்படுத்தப்பட உள்ள 8 முக்கிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முதல்கட்டமாக நீலாம்பூர்–மதுக்கரை புறவழிச்சாலை திட்டம் மற்றும் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றார்.
இந்த இரண்டு திட்டங்களிலும் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காண, இன்னும் இரண்டு நாட்களில் டெல்லி சென்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு குழு அமைக்கப்படவுள்ளதாகவும், நிலுவையில் உள்ள திட்டங்களை ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். கோவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும், விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
