கோல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தை 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்த சம்பவம் அக்கட்சியில் நிலவும் உள்கட்சி பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. எம்எல்ஏக்களின் குறைந்த வருகையால் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிடப்பட்ட கூட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட திரிணமுல் கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், ஆட்சியை கைப்பற்றிய பாஜக நடத்திய கூட்டங்களில் சில திரிணமுல் எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், திரிணமுல் காங்கிரஸ் விரைவில் பலவீனமடையும் என கட்சியின் சில நிர்வாகிகளே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில், 80 எம்எல்ஏக்கள் கொண்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திரிணமுல் சட்டசபைத் தலைவர் சோவன்தேப் சட்டோபாத்யாய செய்திருந்தார்.
ஆனால், கூட்டத்தில் வெறும் 20 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றதால் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திட்டமிடப்பட்ட கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அங்கு வந்திருந்த எம்எல்ஏக்களுடன் மம்தா பானர்ஜி முறைசாரா ஆலோசனைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கட்சித் தலைமையினர் விளக்கம் அளிக்கையில், திரிணமுல் எம்பிக்களான அபிஷேக் பானர்ஜி மற்றும் கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்தால் பல எம்எல்ஏக்கள் உள்ளூர் அளவிலான போராட்டங்கள் மற்றும் கட்சி பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தனர்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “எங்கள் தலைவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் தங்கள் பகுதிகளில் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட தொண்டர்களுக்கு உதவும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்” என்றார்.
