தமிழக சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை தொடர்பான விவாதத்தில், கோவில் நிதி பயன்பாடு குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கோவில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் வருவாய் புனித நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற திட்டங்கள் இனி தொடருமா என்பது குறித்து அரசின் விளக்கத்தையும் கோரினார்.
இதற்கு பதிலளித்த ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கோவில் வருவாய் கோவில்களின் மேம்பாடு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார். முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதாகவும், பல இடங்களில் பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், வருவாய் ஈட்டும் நோக்கில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலின் ரூ.10 கோடி நிதியை பயன்படுத்தி பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை முந்தைய அரசு அறிவித்ததாக அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டினார். அந்தக் கோவிலுக்கு மாதந்தோறும் சுமார் 500 பக்தர்கள் மட்டுமே வருவதாகவும், முதலில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, குன்னூரில் உள்ள 56 கோவில்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்திலேயே நகராட்சியின் பரிந்துரைப்படி பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டதாக விளக்கமளித்தார்.
அதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், கோவிலுக்கு சொந்தமான இடத்தை நகராட்சிக்கு குத்தகைக்கு வழங்கி வருவாய் ஈட்டியிருக்கலாம் என்றும், கோவில் நிதியை நேரடியாக வாகன நிறுத்துமிடம் கட்ட பயன்படுத்துவது அவசியமற்றது என்றும் தெரிவித்தார். பக்தர்களுக்கு முதன்மையாக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளே தேவை என அவர் வலியுறுத்தினார்.
