சென்னை: தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்பின்) மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களின் நிதி முழுமையாக பாதுகாப்பாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் அமைப்பின் தலைவர் டி.ஆர். ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களின் உபரி நிதியை தமிழக அரசின் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் அறநிலையத் துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக கடந்த பிப்ரவரியில் இந்து சமய அறநிலையத் துறை அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், கோவில் சொத்துகள் மற்றும் மத நிறுவனங்களின் நிதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அறநிலையத் துறை சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு முரணாக இந்த அரசாணை அமைந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. அதோடு, கோவில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வி. பாலசுப்பிரமணியம் ஆகியோர், பவர்பின் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோவில் நிதி பாதுகாப்பாக இருக்கும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பவர்பின் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு இதுவரை உரிய வட்டி தொகைகள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும், எனவே முதலீட்டின் பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவாதத்தை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டதுடன், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
