மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சியில் புதிய அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற கொறடா உத்தரவை மீறி ஆறு எம்பிக்கள் பங்கேற்காதது கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் லோக்சபா கொறடா அரவிந்த் சாவந்த் உத்தரவிட்டிருந்தார். உத்தரவை மீறினால் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பேசிய உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கூட்டத்தில் பங்கேற்காத ஆறு எம்பிக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிராவில் பாஜக அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், கூட்டத்தை புறக்கணித்த எம்பிக்கள் மக்களவை சபாநாயகரை சந்தித்து, உத்தவ் தாக்கரே காங்கிரஸுடன் இணைய முயற்சி செய்கிறார் என்றும், தங்களுக்கு தனி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தேர்தல் காலத்திலும் தொகுதி பணிகளிலும் உத்தவ் தாக்கரே போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் உத்தவ் சிவசேனா கட்சியில் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
