ராய்பூர்: கட்டாய மற்றும் கூட்டு மதமாற்றத்தைத் தடுக்கும் நோக்கில், கடும் தண்டனைகளை உள்ளடக்கிய ‘சத்தீஸ்கர் தர்ம் ஸ்வதந்த்ரயா விதேயக் – 2026’ மசோதா சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கரில், துணை முதல்வர் விஜய் சர்மா இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். 2000ஆம் ஆண்டு மாநிலம் உருவானபோது அமலில் இருந்த மத சுதந்திர சட்டத்துக்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
திருமணம், நிதியுதவி போன்ற ஆசை வார்த்தைகள் அல்லது மிரட்டல் மூலம் பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர் உள்ளிட்டவர்களை மதமாற்றம் செய்யும் சம்பவங்களைத் தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக:
-
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு, மேலும் குறைந்தது ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
-
பெண்கள், சிறார்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியினரை இலக்காகக் கொண்டு மதமாற்றம் செய்தால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் குறைந்தது ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
-
இரண்டுக்கும் மேற்பட்டோரை மதமாற்றம் செய்வது ‘கூட்டு மதமாற்றம்’ என கருதப்பட்டு, அதற்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். இந்த வழக்குகளில் ஜாமின் வழங்கப்படாது.
-
ஒருவரின் மூதாதையர் மதத்திற்கு திரும்புவது மதமாற்றமாகக் கருதப்படாது.
-
மதம் மாற விரும்புவோர், மாவட்ட நீதிபதி அளவிலான அதிகாரிகளிடம் முன்கூட்டியே அறிவிப்பு அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
