பெங்களூரு: மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசின் செயல்பாடுகளில் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் பேசுகிறார் என்றும், இந்தியாவின் சாதனைகளை தொடர்ந்து குறைத்து மதிப்பிடுகிறார் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா ஆண்டுதோறும் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ராகுல் காந்தி கவனிக்கத் தவறுவதாகவும் அவர் கூறினார்.
மக்களவையில் பேசும் ஒவ்வொரு முறையும் ராகுல் காந்தி அரசின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சித்து வருவதாகவும், இந்தியாவின் சாதனைகள் மற்றும் இந்திய மக்களின் முயற்சிகளை குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
மேலும், மேற்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவிய காலத்திலும், இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாத வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நாட்டின் எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவில் நடைபெற்ற ‘மாஸ் கிளீனிங்’ நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.
