மத்தியப் பிரதேசம் மற்றும் டில்லியில் ஏற்பட்ட இரண்டு தனித்தனியான குடியிருப்பு தீ விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (மார்ச் 18) அதிகாலை ஒரு வீட்டில் திடீரென தீப்பற்றியது. சில நிமிடங்களில் தீ குடியிருப்பு முழுவதும் வேகமாக பரவியது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
போலீசார் தெரிவித்ததாவது, தீ ஏற்பட்ட வீட்டிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ வேகமாக பரவி, பலி எண்ணிக்கை அதிகரித்ததாக தெரியவந்துள்ளது.
இதேபோல், டில்லி பாலம் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்திலும் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தீப்பற்றியதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைக்கும் பணியிலும், சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இருப்பினும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
