புதுடில்லி: டீசல் இன்ஜின்களில் இருந்து மின்சார இன்ஜின்களுக்கு மாற்றியதன் மூலம் இந்திய ரயில்வே ரூ.6,000 கோடி வரை சேமித்துள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் ரயில்வே அமைச்சக மானியக் கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: நாட்டின் முக்கியமான போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ரயில்வே திகழ்கிறது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரயில்களை இயக்குவதில் டீசலிலிருந்து மின்சாரத்திற்கு மாற்றம் செய்ததன் மூலம் எரிசக்திச் செலவு குறைந்து, இந்திய ரயில்வே ரூ.6,000 கோடி சேமிப்பு கண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் 35,000 கிலோமீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 27,000 கிலோமீட்டர் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
ரயில்வே செலவுகளில் ஊழியர்களின் ஊதியம் முதன்மையான செலவாக இருந்தாலும், அதற்கு அடுத்ததாக எரிசக்தி செலவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், எதிர்காலத்தில் டீசல் இன்ஜின்களை படிப்படியாக குறைத்து முழுமையாக மின்சார ரயில்களுக்கு மாற்றம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2014ஆம் ஆண்டு முதல் ‘வாக்கு அரசியல்’க்கு பதிலாக ‘செயல்திறன் அரசியல்’ முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே பட்ஜெட்டை பொதுப் பட்ஜெட்டுடன் இணைத்தது ஒரு தொலைநோக்கு முடிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்து, புதிய திட்டங்கள் மற்றும் ரயில்கள் ஆண்டு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. துறையின் நிதிநிலை வலுப்பெற்று, கணக்குகள் வெளியீட்டில் வெளிப்படைத்தன்மையும் உயர்ந்துள்ளது.
இந்த விவாதத்தில் மொத்தம் 210 எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இறுதியில், 2026–27 நிதியாண்டிற்கான ரயில்வே அமைச்சக மானியக் கோரிக்கைகளை லோக்சபா ஒப்புதல் அளித்தது.
