கர்நாடக மாநில ஆளுநரின் பயணத்திற்காக நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, பெங்களூருவில் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், நேற்று காலை மங்களூருவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவிலுள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து லோக்பவனுக்கு அவர் பயணிக்க இருந்ததால், அவரது வாகன அணிவகுப்பு எந்த தடையும் இன்றி செல்லும் வகையில் ‘ஜீரோ டிராபிக்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக பழைய விமான நிலைய சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த ஒருவர் தனது காரிலிருந்து இறங்கி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை அணுகிய பாதுகாப்பு போலீசார், சாலையிலிருந்து எழுந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அந்த நபர், “கவர்னர் மட்டும் VIP அல்ல, நானும் VIP தான். ஆளுநரின் விமானம் தரையிறங்குவதற்கு முன்பே போக்குவரத்தை ஏன் நிறுத்த வேண்டும்? என் மனைவி கர்ப்பிணியாக காரில் காத்திருக்கிறார். அவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் ஆளுநரின் வாகன அணிவகுப்பு அந்த வழியாக வருவதை கவனித்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நபரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போன்களில் பதிவு செய்தனர். பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் கருத்துக்கு ஆதரவாக சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
