புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், லோக்சபாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு நல்ல விஷயத்தை தொடங்கும் முன் தீய சக்திகளின் தாக்கம் இல்லாமல் இருக்க கருப்பு திலகம் இடும் பாரம்பரியம் உள்ளது” என கிண்டலாக குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், “கருப்பு என்பது காளி தேவியின் நிறம். ஹிந்துத்துவாவை பாதுகாக்கிறோம் என்று கூறும் பா.ஜ.க., காளியை மறந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பெண் சக்தியை பிரதிபலிக்கும் காளி தேவியும் கருப்பு நிறத்தைச் சார்ந்தவராக இருப்பதாகவும், அநீதி மற்றும் அராஜகத்தை எதிர்க்கும் அடையாளமாக கருப்பு நிறத்தை தேர்வு செய்து தாங்கள் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இறுதி வரை தங்கள் நிலைப்பாட்டை தொடருவோம் என்றும் கனிமொழி கூறினார்.
