சென்னை: த.வெ.க. தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 18) பெரம்பூரில் மேற்கொள்ள இருந்த வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அவர் நேற்று பார்வையிட்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதேபோல், பணிமனை முன்பு பெண்களுடன் இணைந்து கட்சியின் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்ததும் கவனம் பெற்றது.
இந்த நிலையில், இன்று பெரம்பூரில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பிரசாரம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் மற்றும் போலீசாரின் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். திருச்சி விமான நிலையத்திலிருந்து திறந்தவெளி வாகனத்தில் பயணம் செய்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.
