சீர்காழி: “எந்த விஷயமும் இல்லாமல் பழனிசாமி கண்டதையும் பேசி வருகிறார்,” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த உள்ளடக்கமும் இல்லாமல் பேசி வருகிறார். நாள்தோறும் வெளியாகும் கருத்துக் கணிப்புகளில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் பழனிசாமியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஏலம் எடுத்து முதல்வரானவர் அவர்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ. ஆளும் மாநில முதல்வர்கள் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், நான் எழுப்பிய கேள்விகளுக்கும் சவால்களுக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை.
ஒருவேளை பழனிசாமி ஆட்சி இருந்திருந்தால், தமிழகத்தை கூறுபோட்டு விற்றிருப்பார். அவரது ஆட்சி இல்லாதது நல்லது.
வரி என்ற பெயரில் தமிழகத்தின் பணத்தை மத்திய அரசு எடுத்து செல்கிறது. ஆனால், தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டங்களையும் அறிவிக்கவில்லை. பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவும் வழங்கப்படவில்லை; ரயில்வே திட்டங்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவற்றை பற்றி பேசாமல், தனது சொந்த கதைகள் மற்றும் சோகக் கதைகளைப் பிரசாரத்தில் பழனிசாமி கூறி வருகிறார்.
தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகளும் முறையாக நடைபெறவில்லை. கொள்ளிடம் ஆற்றில் 6,600 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் சீர்காழி – சிதம்பரம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இவர்கள் கட்டும் மேம்பாலங்கள் குறுகிய காலத்திலேயே இடிந்து விழுகின்றன. சில இடங்களில் திறப்பதற்கு முன்பே சேதமடைகின்றன.
குஜராத்தில் பாலம் இடிந்து 140 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் மக்கள் மறக்கக் கூடாது. இவ்வாறு பல சம்பவங்களை கூற முடியும்.
ஊழல், பொறுப்பின்மை மற்றும் அலட்சியம் நிறைந்ததே மத்திய பா.ஜ. அரசு.
மே 4ஆம் தேதி திருமண நாள் என்றால், தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியான நாள் நிச்சயதார்த்த நாள் எனக் கூறலாம்.
தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா, அல்லது அடிமைபோல் செயல்படும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
