நியூ ஜெர்சி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில், பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் அடிக்கப்பட்ட கோல் பெல்ஜியத்தை தோல்வியில் இருந்து காப்பாற்றியது.
அமெரிக்காவின் மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய எகிப்து அணியின் கேப்டன் முகமது சலா களமிறங்கினார். தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், எகிப்தின் வலுவான தற்காப்பை உடைக்க முடியாமல் திணறியது.
ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில், முகமது சலாவின் பாஸை சிறப்பாக பயன்படுத்திய முஸ்தபா முகமது கோல் அடித்து, எகிப்தை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி எகிப்தின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியிலும் எகிப்து வீரர்கள் தற்காப்பில் சிறப்பாக செயல்பட்டதால், பெல்ஜியம் கோல் அடிக்க முடியாமல் போராடியது. தோல்வி நெருங்கிய நிலையில், ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் லோயிஸ் ஒபெண்டா கோல் அடித்து பெல்ஜியத்தை சமன் செய்ய வைத்தார்.
கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்காததால், போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.
